Posts Tagged ‘முத்தம்’

 

உன் நினைவுகள் படாத ஒரு
பொருளை வீட்டில் என்னால்
காட்ட முடியாது அம்மா!
நீ கட்டிய சேலை என்
தலையணையாக மாறியது.
நீ என் கையைப் பிடித்து
கற்றுத் தந்த மொழிகள்
இன்று கவிதைப் படைக்கிறது
நீ முதன்முதலில் வாங்கிய
உப்புக்கான டப்பாவைப்
பார்க்கையில் உன் கைகளின்
சுவை இன்றும் நாவில் நிற்கிறது
நீ சொல்லித் தந்தபடி நான்
விதைத்த கத்திரி இன்று
நம் வீட்டுக் குழம்பில்
கமகமக்கிறது.
இப்படி வீட்டில் நீ கட்டிய
பந்தலில் வளர்ந்த அவரக்காய்
மல்லிப் பூ.
வளருமா? என்று நினைத்த வாழைமரம்
என எல்லாவற்றையும் நம்
வீட்டிற்கு வருபவர்களிடம் நான்
காட்டுகிறேன்.
உன் அம்மா எங்கே? என்பவர்களிடம்
இதோ என் அம்மாவென்று
உன் புகைப்படத்தைக் காட்ட
வைத்துச் சென்று விட்டாயே!
அம்மா !

ரத்தத்தில் நனைந்து வந்த
என்னை முத்தத்தால் நனைத்த
உன் இதழ்களில்
முதல் முறை என் பெயரை
எப்பொழுது உச்சரித்தாயோ
அன்றிலிருந்து இன்று வரை
அந்தக் குரலில் கலந்து வரும்
உரிமையை உணர்வை
வேறு எந்த குரலிலும்
நான் உணர்ந்ததில்லை
உன் விரல் பட்ட உணவில்
தான் நான் உயிர் வளர்த்தேன்
உன் இதழ் சிந்திய வார்த்தையை
உச்சரித்துத் தான் மொழி பழகினேன்
உன் சுவாசத்தில் கலந்த காற்றை
சுவாசித்துத் தான் வாழ்ந்திருக்கேன்
முதல் நடந்திடும் நான்
விழுந்தது உன் மடியில்
முதல் மொழியினை நான்
உணர்ந்தது உன் இதழில்
முதல் கலங்கிடும் விழிகளை
துடைத்தது உன் உடையில்
முதல் சிரிப்பினை பழகியது
உன் முகத்தில்
கண்ணாடிப் பார்க்கும் வரை
என் அத்தனை முகங்களும் நீயே…
உன் முன்னாடி இருப்பதை விட
வேறு இன்பமில்லை தாயே
என் நிர்வானத்தை முதலில்
களைத்த நீயே
நீல வானத்தையும் காட்டி
வளர்த்தாய் தாயே
மூச்சு விடும் இடைவெளியிலும்
உன் அன்பு எனை
விட்டு விலகியதில்லை
நீ காட்டி வளர்த்த
ஒவ்வொரு பொருளும்
இனி வேறெங்கும் காண்பதற்கில்லை
கையெடுத்து நீ கும்பிடச்
சொன்ன தெய்வமோ
எனக்குத் தலை சீவிவிட்டதில்லை
நானும் பொய்யுரைத்தப் பொழுதும்
கூட நீ எனை அடித்ததில்லையே
குளிப்பாட்டி விடும் உன் கைகளில்
அடி வாங்கஅடம் பிடிப்பேன்
உன்னிடம் அடி வாங்காமல்
உன்னன்பின் ஆழம் புரிவதில்லை
என்பேன்
கிறுக்கித் தான் அம்மா
உன் கைகளை பிடித்து
எழுதத் துவங்கினேன்
அன்பை சுருக்கி வாழும்
இதயங்களின் நடுவே
உறவுகளைப் பெருக்கி வாழும்
உன்னுடைய நேசத்தில் நெகிழ்ந்தேன்
அணுஅணுவாய் என் வளர்ச்சியை
ரசிப்பாய் ஒரு கைப்பிடி சோறு
குறைந்தாலும் உள்ளம் துடிப்பாய்
என்றைக்கும் உன் சேலை நுனி தான்
என்னுடைய கை குட்டை
உன் முகமே நான் முகம் பார்த்து
தலை சீவும் கண்ணாடி
உன் வாயில் புத்திசாலி என்று கேட்பதை
விட முட்டாள் என்று செல்லமாக கேட்பதையே
நான் விரும்புகிறேன் தாயே
சட்டைப் பையில் கை விடும் பொழுதெல்லாம்
எனக்குத் தெரியாமல் நீ
வைத்த ஒரு ரூபா தலை நீட்டும்
அந்த சுகம் இன்று எந்த
ஆயிரம் லட்சங்களிலும் கிடைப்பதில்லை
உன் விரல் நுனியின் சுவையை
எந்த நட்சத்திர ஹோட்டலிலும்
உணர்ந்ததில்லை
உன் மடியின் சுகத்தை எந்த
பஞ்சு மெத்தையும் தந்ததில்லை ………
அம்மா!
சத்தியமாய் உன்னைப் போல் ஒரு பிரிவை
இனி வேறு ஒருவரும் தரப் போவதில்லை


இந்த அரச மரத்தடியில்
இன்று மட்டும் ஏனோ
அம்மன் குடிவந்தது
நீ அமர்ந்ததைப் பார்த்தால்
எனக்கு வேறொன்றும் சொல்லத்
தோன்றவில்லை…
என்று எனக்காக காத்திருந்த
உன்னிடம் சொன்னேன் —-.
முறைப்பாக இருந்த உன்னை
என் பேச்சு மேலும் கோபப்படுத்தியது
அம்மனுக்கு கோபம் வந்தால்
இந்த அடியேன் என்னாவது
பார்வையாலையே எரித்துவிடுவாய்
போல் இருக்கிறதே– என்றேன்
சற்று உன் முகம் சாந்தமானது
அம்மனுக்குப் பூ எங்கே?
என்று என்னை மடக்கினாய்—
மன்னித்துவிடு! உன் கூந்தலில்
எந்தப் பூவும் இடம் பெறமறுக்கிறது…
கோபத்தை மறந்து என் இதழ்களையே
கண் கொட்ட ஆச்சரியத்தில் பார்த்து
ஏன்? என்றாய்—
என்னை பொறாமைத் தீயில்
தள்ள நினைக்காதே அதிஷ்டக்காரானே!
அவளைப் பார்த்து பொறாமை
கொள்ள எங்களுக்கு மனமில்லை
என்று கெஞ்சுகிறது அத்தனைப்பூக்களும்….
என்றேன்.உன் முகம் மாறிய நளினங்களை
எந்தப் புகைப்படக் கருவியில்
நான் பதிவு செய்ய – என்
மனத் திரையைத் தவிர…
மேலும் கேட்டாய்—- சரி
அது என்ன அதிஷ்டக்காரன்?
உனக்கு சொந்தம் அல்லவா!
அதனால் சொல்லியிருக்கும்
என்றேன்….கிண்டலான
ஒரு பார்வை பார்த்தாய்
வேறு என்ன சொன்னது?
இருந்தாலும் பாவம் நீ
என்றது—- என்று மேலும்
சொல்லாமல் நிறுத்தினேன்.
ஏன்? நிறுத்துவிட்டாய்
சொல் ஏன் பாவம் நீ
என்ன சொன்னது?
என்று ஆர்வத்தோடு நீ கேட்க…
லேசான தயக்கத்துடன்
பூக்கள் நாங்கள் எங்கள்
அழகை மறைப்பதில்லை
உன்னவளோ ஆடைகொண்டு
அவள் அழகை மறைத்துவிடுகிறாள்
பாவம் தானே நீஎன்றது —-என்றேன்
நொடியில் உன் முகத்தில்
மின்னிய அந்த ஒளிச் சிதறலில்
நான் எரிந்து போகாதது ஆச்சரியமே!
திருடா! என்று என் தலையினை
பிடித்துக் கொண்டாய் …
என் தலை எழுத்து அன்று
சீக்கிரம் பொழுது சாய்ந்தது

pineppadipaarkaathe16pp1.jpgmuthasanthampaarkaathee9jn1.jpg

உன்னிடம் ஒரு முத்தம் கேட்டேன்
யாருமில்லாத இடத்திற்கு வா என்றாய்
உன்னுடைய முத்தம் அவ்வளவு
அழுத்தமான சத்த முத்தமோ!
என்றேன்…………..
உன்னீரு கண்களால் என்னை
எரித்து விடுவதைப் போல
பார்த்தாய்……………….
உன் கோபம் நான் சொன்ன
உண்மையிலா! இல்லை
சொல்லாது விட்ட பொய்யிலா!
என்றேன்எது உண்மை? எது பொய்?
தெரியாதவள் போல் கேட்டாய்
நீ கொடுப்பதாய் சொன்ன
உன் முத்தம் உண்மை
நீ கோபிப்பதாய் நடிக்கும்
உன் கண்கள் பொய்யென்றேன்
மௌனமானாய்!!
இந்த மௌனம் முத்தத்திற்கான
சம்மதமோ! கேட்டேன்
வெட்க்கத்தால் தலைக்கவிழ்ந்தாய் நீ
உன் வெட்கத்தின் அழகை
காணத் தானே இத்தனை
முயற்சியும்
மகிழ்ச்சியில் நான்…………..