‘சிறுகதை’ பகுப்புக்கான தொகுப்பு

ஏன் இப்படி நாயைப் போல் அலைகிறாய் ? உனக்கென்ன குறை வைத்தேன் நான் ? இப்படி சோம்பி கிடக்க வா நீ பிறந்தாய்,உனக்குள் இருந்த அறிவு  எங்கே? உன்னை மனிதனாக்கிய  அந்த சிந்தனை எங்கே  எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி இப்படி இருப்பது உனக்கு உறுத்தவில்லையா? உன்னை எந்த ஒரு கலங்கமுமின்றி  வளர்க்க எத்தனை முயற்சி செய்திருப்பேன். இருந்தும் நீ  இப்படி இருக்கலாமா? அவளிடம் அப்படி எண்னவிருக்கிறதென்று எனக்கு தெரியவில்லை. உனக்காக அவள் இது வரை ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. நீயோ இரும்புப் பிடியாய் அவளை விடாமல் நினைத்தபடி  இருக்கிறாய்  மடையா! காதாலென்று நினைத்துக் கொண்டிருக்கிறாயோ முட்டாள் . எத்தனை புத்தகங்களை உனக்காக உன் அறிவின் வளர்ச்சிக்காக  புரட்டியிருப்பேன். அத்தனையையும் வீணாக்கி விட்டாயே! உன் அறியாமையை விளக்க எத்தனை பேரை நாடிச் சென்றிருப்பேன், அவர்களிடம் எத்தனை கேள்விகள் கேட்டிருப்பேன்  உனக்காக! உன்னை பக்குவமடைய செய்வதற்காக… எல்லாவற்றையும் மறந்து விட்டு இன்று எவளோ ஒருத்தி பின்னே  செல்கிறாயே  இது  உனக்கே  நியாயமாக இருக்கிறதா சொல் …  சொல்…..? “ டேய்  வசந்த் அங்க என்னடா சத்தம்?” ”ஒண்ணுமில்லைம்மா! ரேடியோ கேட்கலாம்னு போட்டேன் சரியா வேலை செய்யலை“ அம்மா பக்கத்து அறையில் இருந்து ”தூங்கலையா? மணி பன்னெண்டு ஆகுது” என்று குரல் கொடுத்துவிட்டு மீண்டும் அமைதி ஆனாள் ” சே! பொய் உன்னால தான் ” என்றவன் தன் தலையிலேயே அடித்துக் கொண்டான் லேசான இருட்டில் சின்ன, கைக்கு அடக்கமான ஒரு கண்ணாடியில் தன்  முகத்தைப் பார்த்தபடி தன்னையே திட்டிக் கொண்டிருந்த்தான் வசந்த். அதெப்படி, அவ பின்னாடி போன ,அவ என்ன அவ்வளவு அழகா? அந்த ஒரு வெள்ளிக்கிழமை காலையில் நீ அவளைத் தவிர வேறு  பெண்களையே பார்க்கவில்லையா? ஏன் அவர்கள் மேல் செல்லாத உன் பார்வை அவள் மேல் மட்டும்  சென்றது, [...]